மனங்கொத்திப் பறவை – கவிதை

மனங்கொத்திப் பறவையின்
துயரப் பாடலில்
ஆழ்ந்திருந்த தருணமது

கானல்நீராய் தொலைவிலிருந்த
நிம்மதிகளின் கனவில்
என்னைக் கரைத்துக் கொள்ள
முயன்றேன், முடியவில்லை.

நித்தம் அழைக்கும் கடமைகளின்
உத்திரவில் நான் என்னைத்
தொலைத்துவிட்டேன்
தொலைந்தேன் என
யாருக்கும் தெரியாது
எனக்கும்.

பின்னொருநாளில்
மழைவடிந்த
பூமியின் மணத்தில்
ஒரு குழந்தையின்
சுவாசிப்பை தரிசித்தேன்.

அந்த கணங்களை
என்
மனங்கொத்திப் பறவை
அனுமதித்த நேரம்
மெல்ல மெல்ல
என்னைக் கண்டு பிடிக்கிறேன்.

என்றாலும்
கானல்நீரின்
காத தூரம்
என்னை இருக்கவிடவில்லை.

நில்லாத பயணத்தில்
நேற்றைய கணங்களின்
அசைவுகளை
அசைபோடும்
வாய்ப்பு
இனி எப்போது?

தெரியவில்லை
மனங்கொத்தி பறவையிடம்தான்
கேட்கவேண்டும்.

Posted in கவிதை | Tagged , , | 1 பின்னூட்டம்